தமிழக செய்திகள்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சிறுத்தை நடமாட்டம்

சிறுத்தைகள் பகல்-இரவுநேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றன.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவுக்கு பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்து அங்குள்ள படகு இல்லம் மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து செல்கின்றனர்.

சிறுத்தை நடமாட்டம்

இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை நேற்று மாலை சிம்ஸ் பூங்கா வளாகத்துக்கு வந்தது. பின்னர் அங்கு உள்ள படகு இல்லம் மற்றும் சிறுவர் பூங்கா அருகே சுற்றி திரிந்தது. சிம்ஸ் பூங்காவில் சிறுத்தை நடமாடியதை கண்டு பூங்கா பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அந்த சிறுத்தை அருகில் உள்ள புதருக்குள் சென்று பதுங்கியது.

வனத்துறை கண்காணிப்பு

இதுகுறித்து பூங்கா நிர்வாகம் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது படகு இல்லம் அருகே சிறுத்தை நடமாடியதற்கான கால்தடங்கள் பதிவாகி இருந்தது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து வனத்துறையினர் டிரோன் கேமரா உதவியுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள படகு இல்லம் மற்றும் சிறுவர் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தற்காலிகமாக தடை விதித்து உள்ளது.

பயணிகளுக்கு தடை

சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ள வனத்துறையினர், படகு சவாரி, சிறுவர் பூங்காவுக்கு எவரும் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

இதுகுறித்து குன்னூர் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுத்தை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் திரும்பிய பின்னரே, படகு இல்லம் மற்றும் சிறுவர் பூங்காவுக்கு செல்ல பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவர்.

அதுவரை வனத்துறையினர் வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக் கூடாது என்று தெரிவித்து உள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சிறுத்தைகள் பகல்-இரவுநேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றன.

இந்த நிலையில் சிம்ஸ் பூங்கா வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவது, அங்கு வேலை பார்த்து வரும் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.