5 மாதங்களாக சேவையை தொடங்குவதற்கான தேதி இறுதிச் செய்யப்படாததால் பொதுமக்கள் வெறுப்பில் உள்ளனர். பணிகள் முடிந்த பிறகு கூட அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர தாமதம் செய்வதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் ஒன்றாகும்.
இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும் கோடம்பாக்கம் பவர் அவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்ட பாதையாகவும் அமைகிறது. 9 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களும் 18 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களும் இதில் இடம் பெறுகின்றன.
4-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லி- வடபழனி வரை 14.6 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் வழித்தட பணி கடந்த பிப்ரவரி மாதம் முடிந்து பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது.
பல கட்ட ஆய்வுக்குப் பிறகு இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்க பிப்ரவரி மாதம் இறுதியில் அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தாமதமானது. தேர்தல் முடிந்து புதிதாக த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்ரோ ரெயிலில் பயணித்து திட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் பூந்தமல்லி- வடபழனி -மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதில் உள்ள தாமதம் குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.
இந்த வழித்தடத்தில் சேவையை தொடங்க தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கடிதம் எழுதி பல மாதங்கள் ஆகியும் இன்னும் தேதி தரப்படவில்லை.
5 மாதங்களாக சேவையை தொடங்குவதற்கான தேதி இறுதிச் செய்யப்படாததால் பொதுமக்கள் வெறுப்பில் உள்ளனர். பணிகள் முடிந்த பிறகு கூட அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர தாமதம் செய்வதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு 50 சதவீதமும் மாநில அரசு 50 சதவீதமும் நிதி உதவி அளிக்கிறது. தற்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெறுவதால் இன்னும் தேதி உறுதி செய்யப்படவில்லை. இது பற்றி முதலமைச்சரிடமும் தெரிவித்துள்ளோம். மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். எந்த நேரத்திலும் தகவல் வரலாம் என்று எதிர்பார்க்கிறோம். மெட்ரோ ரெயில் சேவையை காணொளி மூலம் திறந்து வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரதமர் திறப்பு விழா தேதி தருவதில் உள்ள தாமதம் தான். மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையிடம் இருந்து தகவல் வந்த ஓரிரு நாட்களில் சேவை தொடங்கும்.
இதற்கிடையில் இந்த வழித்தடத்தில் தினமும் டிரைவர் இல்லாமல் சோதனை நடைபெறுகிறது. சேவை தொடங்கிய முதல் 3 மாதங்கள் டிரைவருடன் மெட்ரோ ரெயில் இயங்கும். அதன் பின்னர் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும்.
இந்த வழித்தடத்தில் 13 மெட்ரோ ரெயில்கள் இயக்க தயாராக உள்ளன. கூட்டம் அதிகமாக இருந்தால் கூடுதலாக சேவையை அதிகரிக்கவும் திட்டமிட்டு உள்ளோம். 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும். கூடுதலாக 25 மெட்ரோ ரெயில்கள் தயாராக இருக்கின்றன. தேவைப்பட்டால் அதனையும் பயன்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.