தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கும் நிலையில், திமுக, அதிமுகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜக அரசின் சட்டத்தை எதிர்க்க திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.