

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திலீபன் ஜெய்சங்கர் பேசினார். அப்போது, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். அதற்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா "தற்போது நடைபெறுவது அம்மாவின் ஆட்சிதான்" அதற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மா ஆட்சி என்கிறீர்கள். ஏன் அம்மா பெயரில் திட்டங்களை வழங்கிடக்கூடாது? என்றார்.
இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இது அம்மாவின் ஆட்சிதான் என்று கூறினாரே? என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி "சும்மா ஆட்சி". சும்மா ஆட்சியை மறைப்பதற்காக அம்மா ஆட்சி என்று சொல்கிறார்கள். அம்மா உடைய மாண்பை, அம்மா உடைய சிறப்பை., அம்மா அவர்கள் இந்த தமிழகத்திற்காக,, குறிப்பாக ஜீவாதார உரிமைகளுக்காக ஆட்சியில் இருந்தபோதிலும் சரி, ஆட்சியில் இல்லாதபோதிலும் சரி காவிரி நீர் பிரச்சனைக்காக, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்காக, வீராணம் தண்ணீரை கொண்டு வருவதாக இருந்தாலும் சரி அனைத்தையும் சாதித்து காட்டியவர், சட்டம் போராட்டம் நடத்தி வெற்றிப் பெற்று காண்பித்தவர் புரட்சித் தலைவி அம்மா.
பெண்ணினத்தை உயர்த்தி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதில் வெற்றிக் கண்டவர் புரட்சித் தலைவர் அம்மா. அம்மாவின் ஆட்சிக்காலம் இந்தியாவுக்கு மட்டுமல்ல துணைக் கண்டத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு. மாறுதலை ஏற்படுத்தி தந்திருக்கின்ற ஒரு உன்னதமான ஆட்சிதான் அம்மா உடைய ஆட்சி. அம்மா உடைய ஆட்சியை விஜய் உடைய ஆட்சியுடன் ஒப்பிடக் கூடாது.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொன்னரே, அதேபோல விவசாயிகளாக இருந்தாலும், நெசவாளராக இருந்தாலும், வணிகராக இருந்தாலும், மீனவராக இருந்தாலும் அவர்கள் எங்கேயோ, வெளிநாட்டில் கூட பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் கூட, தானே பாதித்தவர் போல நடவடிக்கைகள் எடுத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
ஆனால், விவசாயிகள் இன்று கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இருந்த முதலமைச்சர்களில் மிகவும் மோசமான முதலமைச்சர் என்றால் அது விஜய்தான். விவசாயிகள் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைத்தான் கேட்கிறோம் தவிர, அவர் கூடியதாக கேட்கவில்லை. மாறுதலாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் தள்ளுபடி சென்று சொன்னீர்கள். சொன்னதை செய்தீர்களா?. இதைப் பற்றி பேசியிருக்கிறீர்களா?. அல்லது கஜானாவில் பணம் இல்லை. என்னால் இயலவில்லை, என்னால் செய்ய இயலவில்லை சொல்லியிருக்கிறீர்களா? வாய் திறக்காமல் மவுனமாக இருந்து சாதிப்பது என்பது மோசமான நிலை. இதனால்தான் விஜய் ஆட்சி சும்மா ஆட்சி. தலையில் முக்காடுபோடும் விதமாக அம்மா ஆட்சி என்று அவர்கள் பேசுகிறார்கள்.
இவ்வாறு ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.