தமிழக செய்திகள்

அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் - திமுக தலைமைக்கு கடிதம் எதுவும் அரசு அனுப்பவில்லை?

தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன.

தொகுதி மறுவரையறை

மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.

முதலமைச்சர் விஜய்

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன.

கனிமொழி

இதுதொடர்பாக தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது என்றும் தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக

அ.தி.மு.க.வும் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளது. அதே போன்று பா.ம.க.வும் விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. வழங்கப்பட்டு உள்ளது. எல்.கே.சுதீஷ் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இன்று டெல்லியில் இருப்பதாகவும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். அதனால் அவரும் பங்கேற்கவில்லை.

திமுக தலைமை

இந்நிலையில், அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த விவகாரத்தில் திமுக தலைமைக்கு அரசு தரப்பில் கடிதம் எதுவும் எழுதவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

எம்.பி.க்களுக்கு மட்டும் அரசு தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், பலருக்கும் அது நேற்று மாலை தான் சென்று சேர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

திமுக தலைமை சொல்லாமல் நாங்கள் எப்படி கலந்து கொள்ள முடியும்? என அக்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.