தமிழக செய்திகள்

விலைவாசி உயர்வை கண்டித்து நவ.3ம் தேதி இந்திய கம்யூ. கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றிய மாநில அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றிய மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நவ.3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

நாடு முழுவதும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உட்பட தென் மாநிலங்களில் அரசி விலை கடுமையாக உயர்த்துள்ளது.

சன்னரக அரிசி உட்பட அரிசி ரகங்களின் விலை 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதனால் சில உயர்தர அரிசி ரகங்கள் கிலோ ரூ.100 வரை விற்பனையாகின்றன. இந்த விலை ஏற்றம் காரணமாக ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

எத்தனால் பெட்ரோல்

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.48-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை விலை, தற்பொழுது ரூபாய் 72 வரை விலை உயர்த்துள்ளது. எத்தனால் தயாரிப்பிற்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதனால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

கமார் 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலப்பு என்ற ஒன்றிய அரசின் கொள்கையே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

தற்போது தீபாவளி போன்ற விழா காலங்கள் நெருங்கி வரும் காலத்தில் சர்க்கரை தேவை அதிகரிக்கும். இந்நிலையில் அதன் விலை ஏற்றம் சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும் சர்க்கரை விலை உயர்வால் ஹோட்டல்களில் டீ, காபி விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக சாலையோர தேநீர் கடைகளில் கூட டீ, காபி விலை ரூ.20 முதல் 30 வரை உயர்த்தது.

அரிசி விலை உயர்வு

தற்போது அரிசி விலையும் கடுமையாக உயர்த்துள்ளது. கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் பதுக்கல், ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களால் இந்த விலையேற்றம் நடத்துள்ளது.

பொன்னி அரிசி ரூபாய் 90க்கும் மேல் அதிகரித்துள்ளது. இட்லி அரிசி ரூபாய் 35 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் பருப்பு வகைகளும் விலை உயர்ந்துள்ளன. உளுத்தம் பருப்பு கிலோ ரூபாய் 120 லிருந்து 150 ஆகவும், கடலைப் பகுப்பு 80-விருந்து 100 ஆகவும், தனியா 160 லிருந்து ரூ.250 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

இதனால் எழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசும், மாநில அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும்.

கண்டன ஆர்ப்பாட்டம்

ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் 03.11.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறும்.

இதில் அனைத்து பகுதி மக்களும் கலந்து கொள்ளுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு கேட்டுக்கொள்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT