தமிழக செய்திகள்

கோவை பெண் யூடியூபருக்கு கொலை மிரட்டல்: ஊட்டியில் பதுங்கியிருந்த பிரபல யூடியூபர் மணிகண்டன் கைது

கைதான மணிகண்டன் மீது இதுபோன்று குற்றச் செயல்கள் மற்றும் அவதூறு பரப்பியதாக மொத்தம் 16 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

கோவையில் சமையல் மற்றும் அழகு சாதனப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருவதுடன், "நான் கற்றது" என்ற பெயரில் பிரபல யூடியூப் சேனல் நடத்தி வரும் பெண் தொழில்முனைவோரை சமூக வலைதளங்கள் மூலம் அவதூறாகப் பேசி, அவரது தொழில் மற்றும் தனிப்பட்ட நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த வழக்கில், திருச்செந்தூரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மணிகண்டன் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து கோவை சைபர் கிரைம் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை சிவானந்தா காலனி டாடாபாத் சிக்ஸ் கார்னர் பகுதியில் கே.விக்னேஸ்வரி என்பவர் கடந்த ஓராண்டாக "நான் கற்றது" என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். மேலும், அதே பெயரில் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் பல்வேறு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான விளக்க வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே, திருச்செந்தூரைச் சேர்ந்த சங்கரநாயனார் மகன் மணிகண்டன் (வயது 37) என்பவர், விக்னேஸ்வரி வெளியிடும் வீடியோக்களைத் தனது சொந்த யூடியூப் சேனலில் தொடர்ந்து திருடி வெளியிட்டு வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, விக்னேஸ்வரியின் தொழில் மற்றும் அவரது நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்யான அவதூறு குற்றச்சாட்டுகளை மணிகண்டன் பரப்பி வந்துள்ளார். குறிப்பாக, அவரது பெண்மைக்கும் மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்தும் பாணியில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆபாசமாகவும் தகாத முறையிலும் பேசி வந்துள்ளார்.

இதனை விக்னேஸ்வரி வன்மையாகக் கண்டித்தபோது, அவரது தொழிலில் வேண்டுமென்றே பேரிழப்பையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் மணிகண்டன் செயல்பட்டுள்ளார். மேலும், இதுகுறித் தட்டிக் கேட்டால் "உன்னை இத்துடன் முடித்துவிடுவேன்" என்று கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விக்னேஸ்வரி, இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் முறையான புகாரை அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார், தலைமறைவாகியிருந்த மணிகண்டனைத் தேடும் பணியில் இறங்கினர். அப்போது அவர் நீலகிரி மாவட்டம் ஊட்டிப் பகுதியில் தலைமறைவாகப் பதுங்கி இருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் லிங்கேஸ்வரன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஊட்டிக்கு விரைந்து சென்று, அங்கே பதுங்கியிருந்த மணிகண்டனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில், கைதான மணிகண்டன் மீது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்று குற்றச் செயல்கள் மற்றும் அவதூறு பரப்பியதாக மொத்தம் 16 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைக் தொடர்ந்து, அவரிடம் முறையான விசாரணை முடிக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். சமூக வலைதளங்களை முறையற்ற வழிகளில் பயன்படுத்திப் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீதும், மிரட்டல் விடுப்போர் மீதும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT