

பிரதமர் நரேந்திர மோடியை வெளிப்படையான விவாதத்திற்கு அழைத்துள்ள ராகுல் காந்தி, அரசு தன்னை வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பற்கான சான்றுகள் தன் போனில் உள்ளதாகவும், தனது போன் அரசாங்கத்தால் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் கூறி வருவது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.
வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடைபெறவிடாமல் முடக்குவதற்காகவே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி போன் டேப்பிங் குற்றச்சாட்டைத் திட்டமிட்டு எழுப்பியுள்ளார் என்று மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பஸ்வான் கடுமையாகச் சாடியுள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து எழுப்புவது ராகுல் காந்திக்கு வாடிக்கையாகிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பஸ்வான், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதை குழப்புவதற்காகவே காங்கிரஸ் தரப்பிலிருந்து இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகத் தெரிவித்தார். போன் டேப்பிங் விவகாரத்தில் ராகுல் காந்திமுன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எவ்விதமான அதிகாரப்பூர்வ ஆதாரமோ அல்லது உறுதிப்படுத்தலோ கிடையாது என்றும், பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் ஆதாரமில்லாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியைக் குறிப்பிட்ட அவர், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) விவகாரத்தில் மில்லியன் கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டதாகக் கூறி ராகுல் காந்தி மக்களிடையே வாதங்களை முன்வைத்தாலும், அதற்கு பொதுமக்களிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். அவரது பேரணிக்கு ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களே திரண்டதே மக்கள் மத்தியில் இந்த குற்றச்சாட்டுகள் எடுபடவில்லை என்பதற்குச் சான்று என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை வெளிப்படையான விவாதத்திற்கு அழைத்துள்ள ராகுல் காந்தி, அரசு தன்னை வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பற்கான சான்றுகள் தன் போனில் உள்ளதாகவும், தனது போன் அரசாங்கத்தால் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் கூறி வருவது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று சிராக் பஸ்வான் கூறியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கூச்சலை ஏற்படுத்தி அவையை செயல்படாமல் முடக்கும் எதிர்கட்சிகளின் இந்த உத்தி இந்த முறையும் தொடர்வதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.