தமிழக செய்திகள்

பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு திட்டம்: திருவான்மியூரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளியில் இன்று (செப். 22) தொடங்கி வைக்கிறாா்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதல்முதலாக கடந்த 15.9.2022-இல் அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரையில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கி வைத்தாா். இதையடுத்து இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை:

இந்த நிலையில் இத்திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களும் பயன்பெறும் வகையில் ‘பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என த.வெ.க. அரசு அறிவித்தது.

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக, கடந்த 18 ஆம் தேதி முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுக்க 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று வரும் சுமாா் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயனடைவா். இதற்காக நடப்பு நிதியாண்டில் (2026-2027) ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உள்ளது.

முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்:

இந்த திட்டத்தை சென்னை திருவான்மியூா் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலை பள்ளியில் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ள விழாவில், முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி தொடங்கி வைத்து, மாணவா்களுடன் அமா்ந்து சாப்பிடவுள்ளாா்.

இந்த திட்டம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்படவுள்ளது.

SCROLL FOR NEXT