தமிழக செய்திகள்

சட்டசபையில் தினத்தந்தி நாளிதழுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் விஜய்

த.வெ.க.வை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றி என்றார்.

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று சட்டசபையில் பேசியதாவது:

1967-ல் அண்ணா வெற்றிபெற்று சாமானியர்களின் ஆட்சியை அமைத்தார். 1977-ல் எம்.ஜி.ஆர். வெற்றிபெற்று மிக சாமானியர்களின் ஆட்சி அமைத்தார்.

தற்போது மிக மிக சாமானியர்களின் ஆட்சியை அமைத்துள்ளோம். தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மக்கள் பணியே நமது பிரதான பணியாக இருக்கும்.

தினத்தந்திக்கு நன்றி

கிளீன் கவர்னன்ஸ், குட் கவர்னன்ஸ் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இப்போது மட்டுமல்ல எப்போதும் இப்படித்தான் இருப்போம். இது 100 சதவீதம் உண்மை என்பதால்தான், பாரம்பரியமான ‘தினத்தந்தி’ பத்திரிகை “ஊழலின் ஊற்றுக்கண் அடைக்கப்படுகிறது” என்று 16-6-2026 அன்று ஒரு தலையங்கமே எழுதியிருக்கு. “ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அது தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று எம்.ஜி.ஆர். அன்று பாடினார். அதை இன்று விஜய் செயலில் காட்டுகிறார்” என்று அந்த எடிடோரியல்ல எழுதியிருக்கு.

இந்த நேரத்தில் தினத்தந்திக்கு நம்முடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அரசியலுக்கு வந்து 2 வருடம்தான் ஆகிறது. உங்களுக்கு என்ன தெரியும், உங்களால் என்ன முடியும் என்று கேள்வி கேட்டவர்களுக்கு தினத்தந்தியில் வந்த பதிலே போதும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.