தமிழக செய்திகள்

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர் விஜய்

முதலமைச்சருக்கு விவசாயிகள் பொன்னாடை அணிவித்து, உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.​

​விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளை கேட்டறிந்த முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

​ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று நடைபெறும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கி கடனுதவிகள் வழங்கும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய் கோவையில் இருந்து கார் மூலம் பெருந்துறை நோக்கிப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்.​

​முதலமைச்சர் வரும் வழியில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே அத்திக்கடவு - அவினாசி திட்டப் போராட்டக் குழுவினர் மற்றும் ஏராளமான விவசாயிகள் முதலமைச்சரைச் சந்தித்துத் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை முறையிடுவதற்காகச் சாலையோரம் காத்திருந்தனர்.

விவசாயிகளுடன் சந்திப்பு

​விவசாயிகள் சாலையில் காத்துக்கொண்டிருப்பதைப் பார்த்த முதலமைச்சர் விஜய், உடனடியாகத் தனது பாதுகாப்பு வாகனங்களை நிறுத்துமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து காரில் இருந்து கீழே இறங்கிய முதலமைச்சர், நேரடியாக விவசாயிகள் நின்றிருந்த இடத்திற்குச் சென்று அவர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது முதலமைச்சருக்கு விவசாயிகள் பொன்னாடை அணிவித்து, உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.​

இதனைத் தொடர்ந்து, அத்திக்கடவு - அவினாசி திட்டப் போராட்டக் கூட்டமைப்பினர் தங்களது பிரதானக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் வழங்கி விளக்கிப் பேசினர்.

அந்த மனுவில் அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகளின் போது நீர்நிலைகள் சரியாக ஆய்வு செய்யப்படாத காரணத்தால், திட்டத்தின் முதற்கட்ட வரைபடத்தில் சேர்க்கப்பட வேண்டிய சுமார் 1,400 குளங்கள் மற்றும் குட்டைகள் முற்றிலும் விடுபட்டுள்ளன.

1400 குளங்கள்

இந்த 1,400 குளங்கள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்படாததால், அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவைச் சந்தித்து 1,200 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இதனால் விவசாயமும், குடிநீர் ஆதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

​எனவே, விடுபட்ட 1,400 நீர்நிலைகளுக்கும் தண்ணீரைக் கொண்டு சேர்க்கும் வகையில், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகளை உடனடியாகத் தொடங்கி விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.​

​விவசாயிகள் தெரிவித்த அனைத்துக் கோரிக்கைகளையும் கனிவோடு கேட்டறிந்த முதலமைச்சர் விஜய், விடுபட்ட குளங்கள் மற்றும் குட்டைகள் குறித்து உடனடியாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு, 2-ம் கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

SCROLL FOR NEXT