முதலமைச்சர் விஜய் வரும் 10 மற்றும் 11-ந்தேதிகளில் கரூர் செல்கிறார். கரூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.
முன்னதாக, கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடந்த த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
பாதுகாப்பு மற்றும் போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் விஜய்யால் அந்த நேரத்தில், கரூர் சென்று மக்களுக்கு ஆறுதல் கூற முடியவில்லை. காணொலி காட்சி மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு அழைத்து நேரில் ஆறுதல் கூறினார்.
அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்த தொகை உடனடியாக பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. அவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேலும் பல உதவிகள் செய்யப்படும் என்று விஜய் உத்தரவாதம் அளித்திருந்தார்.
கரூர் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினரை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து பேச இருப்பதாகவும், இதற்காக ஜூலை 2-வது வாரத்தில் அவர் கரூர் செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் முதலமைச்சர் விஜய் கரூர் செல்கிறார். கரூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை அவர் சந்திக்க உள்ளார்.
கரூரை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தேர்தல் வெற்றிக்காக அவர் மக்களுக்கு நன்றி கூறுகிறார். தொடர்ந்து அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.