சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் பல ஊர்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமாக நடந்து வருகிறது. சென்னையிலும் பல பகுதிகளில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலர் மின்வாரியத்தில் புகார் தெரிவித்து வந்தாலும் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் தடைபடுவதால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
மின்தடை ஏற்படுவது குறித்து மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் அவ்வப்போது விளக்கம் அளித்து வந்தாலும் இந்த மின்தடை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசுக்கும் இது சம்பந்தமாக பல பகுதிகளில் இருந்து புகார்கள் சென்றது.
இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் விஜய் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு பகல் 12 மணி அளவில் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரை அலுவலக வாயிலில் அமைச்சர் சிடி நிர்மல் குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்று தலைமை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றார்.
அங்கு முதலமைச்சர் விஜய் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மின்னகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பொதுமக்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை கேட்டறிந்தார்.என்னென்ன மாதிரி புகார்கள் வருகிறது. எந்த மாதிரி குறைகள் சொல்கிறார்கள் என்பதை கேட்டறிந்தார்.
மின்தடையின்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மின் உற்பத்தி பகிர்மான மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
தமிழ்நாட்டில் தினமும் எவ்வளவு மின்சாரம் உற்பத்தி ஆகிறது எவ்வளவு மின்சாரம் தேவை ஏற்படுகிறது பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் அதை ஈடு செய்வதற்கு எந்தெந்த மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது என்பதையும் அவர் கேட்டறிந்தார். அவருக்கு மின்வாரிய அதிகாரிகள் விரிவாக விளக்கம் அளித்தார்கள். இந்த ஆய்வு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.