தமிழக செய்திகள்

எம்எல்ஏக்களுக்கான புத்தாக்க பயிற்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்

சட்டசபையில் உறுப்பினர்கள் என்ன பேச வேண்டும், எதை பேசக்கூடாது போன்ற மரபுகளை அறிந்துகொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்.

2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடித்த நிலையில் சட்டசபைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து உள்ளது.

தமிழக சட்டசபையில் இடம் பெற்றுள்ள தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பல பேருக்கு சட்டசபையின் விதிகள், உறுப்பினர்களின் உரிமைகள், அவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற முன் அனுபவம் உள்ளது.

ஆனால் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் பலர் நேரடியாக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று வந்துள்ளனர்.

அமைச்சர்களாக உள்ள கே.ஏ.செங்கோட்டையன், என்.ஆனந்த், விசுவநாதன், ஷாஜகான் ஆகியோரை தவிர மற்ற அனைத்து த.வெ.க. எம்.எல்.ஏ.க்களும் புதியவர்கள்தான்.

புதிய எம்.எல்.ஏ.க்கள் பலர் அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் சட்டசபையின் நடைமுறைகள், விதிமுறைகள், உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிந்து கொள்வது அவசியம்.

பயிற்சி வகுப்பு

இதற்காக புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் 2 நாட்கள் பயிற்சி வகுப்பு இன்று காலை தொடங்கியது.

இந்த புத்தாக்க பயிற்சி வகுப்பை முதலமைச்சர் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேச வேண்டும் என்பது தொடர்பாக விளக்கம் அளித்து பேசினார்.

இன்றைய பயிற்சி வகுப்பில் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து அனுபவம் வாய்ந்த மூத்த எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பாடம் எடுத்தனர்.

கேள்வி நேரம்

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விகள் கேட்பது எப்படி? அதற்கு எவ்வாறு அணுக வேண்டும். கேள்வியை சுருக்கமாக கேட்பது எப்படி? கவன ஈர்ப்பு தீர்மானம் என்றால் என்ன? வெட்டுத் தீர்மானங்கள் கொடுப்பது, மசோதாக்கள் மீதான விவாதம், நிதிநிலை அறிக்கை தொடர்பான கலந்துரையாடல்கள், மானியக் கோரிக்கையின்போது எவ்வாறு பேச வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

மேலும் மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எப்படி எடுத்து சொல்வது? அரசின் கவனத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது? சட்டமன்ற மரபுகளை எவ்வாறு பின்பற்றுவது? போன்ற விசயங்களும் இந்த பயிற்சி வகுப்பில் முக்கிய பகுதியாக இடம் பெற்றது.

புதுமுகங்கள்

17-வது சட்டமன்ற பேரவையின் எம்.எல்.ஏ.க்களில் மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களை விட த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் தான் அதிகம் பேர் புதுமுகங்களாக உள்ளதால் பயிற்சி வகுப்பில் அவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு சட்டமன்ற நடைமுறைகள் குறித்த புரிதலை விளக்கமாக எடுத்துக் கூறினார்கள்.

பொதுவாக எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்ப டுவர்கள் அரசியல் அனுபவம் பெற்றவர்களாக இருந்தாலும் அவை நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து தனியாக பயிற்சி பெறுவது வழக்கமாக உள்ளது.

தி.மு.க.- அ.தி.மு.க.

தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியின் போதும் புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் இப்போது பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் முதல் முறையாக சட்டசபைக்கு வந்துள்ளதால் அவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்திலேயே இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர். 2 நாள் பயிற்சி முகாம் நாளையுடன் நிறைவு பெற்றவுடன் 17-வது சட்ட பேரவையின் முதல் கூட்டம் வரும் 18-ந்தேதி நடைபெற உள்ளது.

கவர்னர் உரை

அன்றைய தினம் கவர்னர் அர்லேகர் சட்டசபைக்கு வந்து உரை நிகழ்த்துகிறார்.

புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபை நிகழ்வுகள் இந்த முறை நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதால் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

தி.மு.க., அ.தி.மு.க.வில் அனுபவம் வாய்ந்த முன்னாள் அமைச்சர்கள் அதிகம் பேர் உள்ளதால் அவர்களின் கேள்விகளுக்கு சட்டசபையில் ஆளும் கட்சி அமைச்சர்கள் எப்படி பதில் அளிக்கிறார்கள் என்பதை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

புதிய அரசின் திட்டங்கள், கொள்கை அறிவிப்புகள் மற்றும் முக்கிய விவாதங்கள் இந்த சட்டசபை கூட்டத் தொடரில் இடம் பெற வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.