தமிழக செய்திகள்

கேப்பிட்டாலேண்ட் தரவு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்

4 ஏக்கர் பரப்பளவில் 56 மெகாவாட் மின்சாரத்திறன் கொண்ட தரவு மையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் விரிவாக்கத்தின் புதிய கட்டுமானப் பணிக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்.

அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள கேப்பிட்டாலேண்ட் (CapitaLand) தரவு மையத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார்.

டிஜிட்டல் சேவை

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட கேப்பிட்டாலேண்ட் நிறுவனம் அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் டிஜிட்டல் சேவைகளுக்கான தொழில் நுட்ப உதவிகள் வழங்கும் தரவு மையத்தை அமைத்து உள்ளது.

2024-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதின் அடிப்படையில் அம்பத்தூரில் 4 ஏக்கர் பரப்பளவில் 7 அடுக்கு மாடிகளுடன் இந்த தரவு மையம் உருவாகியுள்ளது.

முதலமைச்சர் விஜய்

சுமார் 34 மெகாவாட் ஐ.டி. மின் திறன் கொண்ட இந்த தரவு மையம் 4900 சர்வர் ரேக்குகளுடன் இணைய வழி சேவைக்கான தொழில்நுட்ப உதவிகள் வழங்கும் வசதி கொண்டவை ஆகும். இதன் திறப்பு விழா இன்று காலையில் நடைபெற்றது.

சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங் முன்னிலையில் முதலமைச்சர் விஜய் இந்த தரவு மையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் இருவரும் தொழிற்சாலையின் கட்டமைப்புகளை சுற்றி பார்த்தார்கள். மரக்கன்றுகளும் நட்டனர்.

சென்னையின் முதன்மை டிஜிட்டல் உள்கட்டமைப்பு மையமாக விளங்கும் அம்பத்தூர் பகுதியில் இந்த புதிய தரவு மையம் திறக்கப்பட்டதன் மூலம், தமிழ் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்ப முதலீடுகள் மேலும் வலுவடையும்.

அமைச்சர் கீர்த்தனா

விழாவில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் மற்றும் உயர் அதிகாரிகளும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.

அம்பத்தூர் சென்றிருந்த முதலமைச்சர் விஜய்யை பார்க்க ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு இருந்தனர். அவர்களைப் பார்த்து முதலமைச்சர் விஜய் புன்சிரிப்புடன் கையசைத்தார். பதிலுக்கு பொதுமக்களும் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்கள்.

SCROLL FOR NEXT