சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் விஜய்!

மழைநீர் தேங்காமல் வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் பொருட்டு இந்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Chief Minister Vijay
Published on: 
Summary

சென்னை சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கம் ஒக்கியம் மடுவு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் விஜய் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை நகருக்குச் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், சோழிங்கநல்லூரில் ரூ. 3,108.55 கோடி மதிப்பிலான மாபெரும் சுற்றுக் குழாய் குடிநீர்த் திட்டத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் கீழ், புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உள்பட மொத்தம் 9 குடிநீர் ஆதாரங்கள், 98 கிலோமீட்டர் தொலைவுக்குப் பெரிய இரும்புக் குழாய்கள் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட உள்ளன. அடிக்கல் நாட்டு விழாவைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் பகுதியில் பொதுமக்களின் நடுவே நடந்து சென்று அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் முதல்வர் விஜய் கேட்டறிந்தார்.

மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு

இதனைத் தொடர்ந்து, துரைப்பாக்கம் ஒக்கியம் மடுவு கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை அவர் பார்வையிட்டார். வடகிழக்குப் பருவமழை விரைவில் தீவிரமடைய உள்ள நிலையில், அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் பொருட்டு இந்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு நடந்து வரும் பணிகள் குறித்தும், வடிகாலின் வடிவமைப்பு குறித்தும் வரைபடங்களைக் காட்டி உயர் அதிகாரிகள் முதல்வருக்கு விரிவாக விளக்கினர்.

மழைநீர் வடிகால் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, அப்பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணிகளையும் முதல்வர் விஜய் பார்வையிட்டு, அதன் தற்போதைய நிலை குறித்துக் கேட்டறிந்தார். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக வடிகால் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com