

பிரதான சுற்றுக்குழாய் திட்டத்திற்கு சோழிங்கநல்லூரில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் குடிநீர் தேவையை முழுமையாக நிவர்த்தி செய்யும் வகையிலும், கோடைகாலங்களிலும் தடையின்றி குடிநீர் வழங்கும் நோக்கத்துடனும் செயல்படுத்தப்பட உள்ள பிரதான சுற்றுக்குழாய் திட்டத்திற்கு சோழிங்கநல்லூரில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் சுமார் ரூ.3,108.55 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகிறது.
இதுவரை சென்னைக்கு குடிநீர் வழங்கும் பல்வேறு ஏரிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் தனித்தனி குழாய்கள் மூலமாகவே நீரை விநியோகித்து வந்தன. இதனால் ஒரு பகுதியில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது மற்ற பகுதியில் உள்ள உபரி நீரை உடனடியாக மாற்றுவது கடினமாக இருந்தது. இந்த குறையைப் போக்கும் வகையில், பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய ஏரிகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் உட்பட மொத்தம் 9 குடிநீர் ஆதாரங்கள் ஒரே பிரதான வளையமாக இணைக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை நகரைச் சுற்றிலும் சுமார் 98 கிலோமீட்டர் தொலைவிற்கு துருப்பிடிக்காத தன்மை கொண்ட ராட்சத இரும்பு மற்றும் ஸ்டீல் குழாய்கள் பதிக்கப்படவுள்ளன. இந்த குழாய்கள் அனைத்தும் ஒரு மூடிய வட்ட வடிவில் ஒன்றையொன்று இணைக்கப்படுவதால், தண்ணீர் எங்கும் தேங்காமல் தொடர்ந்து சுழற்சியில் இருக்கும். இதன் காரணமாக குடிநீர் எப்போதும் தூய்மையாகவும், சீரான அழுத்தத்துடனும் விநியோகிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
சென்னை மற்றும் அதன் வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதிகளின் எதிர்கால குடிநீர் தேவையைத் தாங்கும் வகையில், இப்பிரதான சுற்றுக்குழாய் திட்டம் நாளொன்றுக்கு சுமார் 1,762 மில்லியன் லிட்டர் குடிநீரை கையாண்டு விநியோகிக்கும் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான வரைபடங்களை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், அதிகாரிகளிடம் திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், இப்பணிகள் அனைத்தையும் வரவிருக்கும் நான்கரை ஆண்டுகளுக்குள் முழுமையாக முடுக்கிவிட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சரைக் காண வழிநெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைப் பார்த்து முதலமைச்சர் விஜய் அன்புடன் கையசைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.