முதலமைச்சர் விஜய் 
தமிழக செய்திகள்

நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்- முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை

ஆலோசனையில் தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு மற்றும் அயலகத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழ்நாடு சட்டசபை ஒரு நாள் விடுமுறைக்கு பின் இன்று தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்பின்னர், நேபாளம் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலியானவர்கள் மற்றும் அங்கு சிக்கி உள்ள தமிழர்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில்,

கைலாஷ் மானசரோவர் ஆன்மிக பயணம் மேற்கொண்டு நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்கத் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

இந்த நிலையில், நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு மற்றும் அயலகத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழர்களின் நிலை பற்றி கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். அவர்களை பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

ஏற்கனவே தூதரக அதிகாரிகள் மூலம் டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் மீட்பு பணி விவரம் சேகரிக்கும் நிலையில் ஆலோசனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.