பிரசாரத்தின் சிகர நிகழ்ச்சியாக த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் இன்று தாராபுரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சத்தியபாமா, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லெட்சுமணன் உள்பட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் 5 முனைப்போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், பிரதான கட்சி வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியின் எம்.பி. கனிமொழி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் மேற்கொண்டார். இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளருக்கு ஆதரவாக அந்த கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் பிரசாரம் செய்தார்.
அந்த வகையில், த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவு கேட்டு அந்த கட்சியின் அமைச்சர்கள் தாராபுரத்தில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரசாரத்தின் சிகர நிகழ்ச்சியாக த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் இன்று தாராபுரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.
இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் விஜய் தாராபுரத்திற்கு புறப்பட்டார்.
தாராபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்க்கு சாலையின் இருமருங்கிலும் தவெக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.