த.வெ.க. அரசு பொறுப்பேற்று 100-வது நாளை ஒட்டி 110 விதியின் கீழ் பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக முதலமைச்சர் விஜய் பேச்சை தொடங்கும் முன்பு, வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசும்போது , மறைந்த திமுக தலைவரின் பெயரை சொல்லி பேசியதற்கு, திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு வந்த நிலையில் முதலமைச்சர் விஜய் அதற்காக வருத்தம் தெரிவித்தார். கட்சி தலைவர் பெயரை சொல்லி பேசியது தவறு. அவர் சார்பாக நான் மன்னிப்பு ( சாரி ) கேட்கிறேன் என்றார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றி தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்கள் நம் உயிர் என்றால், தமிழக விவசாயிகள் நம் உயிர்நாடி. உலகில் சாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு நடைபெறும் தொழில் என்றால் அது விவசாய தொழில் மட்டுமே.
உலகின் ஓர் மூலையில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்கள் உலகின் மற்றொரு மூலையில் உள்ள மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்கிறது. எந்த நாடு உழவுத் தொழிலை மதித்து விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பையும், ஆதரவையும் வழங்குகிறதோ அந்த நாட்டில்தான் மக்கள் வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.
தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளின் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும் பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க கடந்த 25.5.2026 அன்று குறு சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மட்டும் கருத்தில் கொண்டு குறு-சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை முழு தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டதை உயர்த்தி ரூபாய் 75 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு தொகையையும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூபாய் 35 ஆயிரமும் தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டு அதன் மூலம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 5932.23 கோடி அளவிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 19.6.26 அன்று ஆணையிடப்பட்டது.
இதில் 31.7.2026 வரை ரூபாய் 5267 கோடி விடுவிக்கப்பட்டு 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவும் வைக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் பயிர் கடன் தள்ளுபடியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துக் கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து 7.8.2026 அன்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள், துறை செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட் டத்தில் அவர்களின் கோரிக்கைகள் விரிவாக பரிசீலிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும் அரசால் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை 4 முதல் 5 ஆண்டு கால இடைவெளியில் செலுத்தப்பட்டு வந்துள்ளது.
2021-ம் ஆண்டில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை 2021 முதல் 2026 வரையான காலத்தில் அரசால் 12 தவணைகளாக கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த கால அவகாசம் நமது அரசுக்கு தற்போது இல்லை.
இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025-ம் தேதியிட்ட கடிதத்தில் அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான செயல்பாட்டு நடைமுறைகளின்படி பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழு தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிமுறை நடைமுறையில் வந்துள்ளது.
இந்த வழிகாட்டுதலின் படியும், தமிழ்நாடு அரசின் நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்கு பின்வரும் கூடுதல் தள்ளுபடியை வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது.
75 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100 சதவீதம் முழுமையாகவும், 75 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் வரையும், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 35 ஆயிரம் ரூபாய் வரையும் தள்ளுபடி வழங்கப்படும்.
இதன் மூலம் 75 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2 லட்சத்து 38 ஆயிரத்து 264 விவசாயிகளுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
இதனால் ஏற்கனவே பெற்ற தள்ளுபடி தொகைக்கு மேலாக 40 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படும்.
இந்த கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூபாய் 953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இருந்தாலும் தமிழக விவசாயிகளின் நலனில்தான் நமது நலன் உள்ளது என்று கருதி சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தமாக 6220 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடியை இந்த அரசு வழங்குகிறது.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.