மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் தொடங்கப்படும்.
தமிழக சட்டசபை கடந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கப்படும்.
* 3 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும்.
* ஆண்டு வருவாய் ரூ.2.50 லட்சத்திற்கு குறைவாக உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் வழங்கப்படும்.
* மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை விரிவுப்படுத்தப்படுகிறது.
* மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் தொடங்கப்படும்.
* மகளிருக்கான வெற்றிப் பயணத் திட்டத்திற்கு வருமான உச்ச வரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை.
* திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம்.
* மாவட்டங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்ள சாதாரண பேருந்துகளிலும் இலவசம்.
* மாநகரம், நகரங்களில் இயங்கும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம்.
* வெற்றி பயணம் திட்டம் டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம். இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவாகும்.