தமிழக செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் 100% தள்ளுபடி - முதலமைச்சர் அறிவிப்பு

மே 2025 முதல் பிப்.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் ஜோசப் விஜய்யால் 25.5.2026 தேதியில் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாநிலம் முழுவதிலும் இருந்து இந்த விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. முதலமைச்சர் விஜய் இந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்ய உத்தரவிட்டதற்கிணங்க இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட நேற்று தலைமைச் செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் விவசாயி களுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்க ளுடன் மறு பரிசீலனை செய்யப்பட்டது.

ரூ.6 ஆயிரம் கோடி வரை தள்ளுபடி

இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025-ம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 1.5.2025 முதல் 28.2.2026 வரை பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வரை தள்ளுபடி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு கடன் தொகை ரூ.75 ஆயிரம் வரை கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. ரூ.75 ஆயிரத்துக்கு மேல் ரூ.35 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதன்மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரமும் குறைந்தபட்சமாக ரூ.35 ஆயிரமும் பணப்பயன் கிடைக்கும். இந்தப் பயிர்க்கடன் தள்ளு படி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.

ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம்

இதன்படி 8,33,773 குறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.3,599.67 கோடி, 5,16,183 சிறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.1,995.42 கோடி, 93,548 இதர பெரு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.337.15 கோடி ஆக கூடுதல் 14,43,504 விவசாயிகளுக்கு உத்தேச பயிர்க்கடன் தள்ளுபடித் தொகை ரூ.5,932.23 கோடி ஆகும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 1.5.2025 முதல் 28.2.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,43,504 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT