தமிழக செய்திகள்

234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. டெல்லிக்கு அடிமையாகிவிட்டது. குத்தகைக்குப் போய்விட்டார்கள். வாடகைக்கு விட்டு அவர்கள் அடிமையாகி விட்டார்கள்.

விராலிமலை:

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனது நான்காம் கட்ட சூறாவளி பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே திருவாரூர், நெல்லை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் பிரசாரத்தை முடித்துள்ள அவர், நேற்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சாவூர் வந்தடைந்தார். அங்கு திலகர் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 8 தொகுதி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்த அவர், பின்னர் கார் மூலம் புதுக்கோட்டைக்கு வந்தார்.

வழியில் கந்தர்வகோட்டை பகுதியில் திரண்டிருந்த மக்களுக்கு பிரசார வாகனத்தில் இருந்தபடியே கையசைத்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று இரவு புதுக்கோட்டை ஜெ.ஜெ.கல்லூரியில் தங்கி ஓய்வெடுத்தார். இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். இதில் புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிர பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூரில் மின்வாரிய அலுவலகம் முதல் மேலப்பட்டி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது மார்க்கெட் பகுதி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் குடும்பத்தினர், குழந்தைகளுடன் நின்றிருந்த மக்களை சந்தித்து பேசினார். இலுப்பூர் பேருந்து நிறுத்தத்தில் புறப்பட தயாராக இருந்த பஸ்ஸில் ஏறியும், அந்த வழியாக வந்த பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளிடம் கைகுலுக்கியும் தங்களின் சாதனை திட்டங்களை எடுத்து கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.

இந்த நடைப்பயணத்தின்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள், சிறுவர்கள், மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் தங்கள் சார்பில் புத்தகங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினர். முதல்வரும் அந்த பரிசுகளை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். இதேபோன்று நேற்று சென்னையிலும் மெட்ரோ ரெயிலில் ஏறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்த பயணிகளிடம் தி.மு.க. அரசின் சாதனை திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-

கே: பா.ஜ.க.வின் விமர்சனம், பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடுமா?

ப: பா.ஜ.க.வில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். யார் வந்தாலும், எத்தனை பேர் வந்தாலும் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெல்ல முடியாது.

கே: டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் தொடர்பு என்று எடப்பாடி பழனிசாமி கடுமையான குற்றச்சாட்டை வைக்கிறாரே?

ப: ஆமாம், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. டெல்லிக்கு அடிமையாகிவிட்டது. குத்தகைக்குப் போய்விட்டார்கள். வாடகைக்கு விட்டு அவர்கள் அடிமையாகி விட்டார்கள். ஒரு திராவிடக் கட்சி இப்படிப் போனதைப் பார்த்து நாங்கள் வேதனைப்படுகிறோம், வெட்கப்படுகிறோம். தோல்வியின் உச்சத்தில் போய்விட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்த விரக்தியில் நிதி மேலாண்மையை கையாளத் தெரியவில்லை என்று பேசி வருகிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

கே: புதிய நடிகர்கள் (விஜய்) அரசியலுக்கு வருவது குறித்து?

கே: யார் வந்தாலும் நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் இங்கே எங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கே: 2026 தேர்தல் களம் எப்படி இருக்கும்?

ப: இன்றைக்கு வந்தபோது மக்கள் தந்த எழுச்சியைப் பார்த்தால், 234 தொகுதிகளும் நமக்கே வந்துவிடும் போல் இருக்கிறது. வெற்றி வாய்ப்பு அமோகமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.

கே: நடிகர்கள் பின்னால் சென்று இளைஞர்கள் விபத்துகளை சந்திக்கிறார்களே, அவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

ப: நடிகர்களின் பின்னால் செல்லும் கூட்டத்தை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளார்கள். அவர்கள் நிச்சயம் திருந்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.