

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்து நடிகர் பொன்னம்பலம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் தி.மு.க. ஒரு தீயசக்தி, தே.மு.தி.க. தீஞ்ச சக்தி. இவர்கள் இருவரும் தற்போது கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். மக்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும். நடிகர் விஜய் திரைத்துறை மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினருக்கும் உதவிகளை செய்து வருபவர். அவரை போன்ற பண்பாளர்கள் தான் நாட்டை ஆளவேண்டும். கோடிக்கணக்கான சொத்து இருந்தும் திரைத்துறையில் பிரபலம் அடைந்தும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அனைத்தையும் உதறிவிட்டு மக்களுக்காக சேவை செய்ய வந்துள்ளார்.
எனவே மக்கள் அவருக்கு ஆதரவளித்து முதலமைச்சர் பதவியில் அமர்த்த வேண்டும். அவர் கண்டிப்பாக எம்.ஜி.ஆரை போல நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துவார்.
தி.மு.க.வை பொறுத்தவரை திரைத்துறையில் உள்ள அனைவரும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். யாரையும் வளரவிட மாட்டார்கள். தன்னை மீறி வளர்ந்து விட்டால் அவர்களுக்கு பல்வேறு இடையூறுகளை தருவார்கள். அதுதான் தற்போது விஜய்க்கு நடந்து வருகிறது.
ஒரு திரைப்படம் எடுத்து வெளிவர வேண்டும் என்றால் தி.மு.க.வில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அனுமதி கொடுத்தால்தான் முடியும். ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைய போராடும் விஜய்க்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.