

தருமபுரி:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தி.மு.க. கூட்டணி சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து தருமபுரி, நல்லம்பள்ளி, இண்டூர் பகுதிகளில் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. தமிழகம் முழுவதும் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த கூட்டணிக்கு வரவேற்பு இருக்கிறது.
எதிர்க்கட்சிகளை திட்டி ஓட்டு வாங்கும் பழக்கம் நமது கூட்டணிக்கு கிடையாது. யார் எப்படிப்பட்டவர்கள்? என்பது மக்களுக்கு தெரியும். துளசியின் வாசம் மாறினாலும் தவசியின் வார்த்தை மாறாது.
கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் விஜயகாந்திற்கு 50 ஆண்டு கால நட்பு இருந்தது. அதேபோல் திருமாவளவனும், விஜயகாந்தும் நெருங்கிய நண்பர்கள். நாம் அனைவரும் ஒரே குடும்பம். இன்று (நேற்று) காலை அவரிடம் செல்போனில் பேசினேன்.
அப்போது அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தே.மு.தி.க.வுக்கு முழு ஆதரவு அளித்து தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபடும் என்று கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன். நான் போட்டியிடும் விருத்தாசலம் தொகுதியில் திருமாவளவன் பிரசாரம் செய்ய உள்ளார்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்புள்ள கூட்டணி. சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும். தமிழ்நாட்டில் தி.மு.க. 7-வது முறையாக ஆட்சி அமைக்கும்.
மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். அரிவாளால் நெல் கதிர்களை அறுத்து பானையில் சமைத்து கைகளால் முரசு கொட்டி உதயசூரியனுக்கு அந்த பொங்கலை படைப்போம்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.