காணாமல் போன செஞ்சி சிறுமி பற்றி இதுவரை முதலைச்சர் விஜய் வாய் திறக்ககாதது ஏன் என்றும் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் குடிஅரசு இதழ் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழா இன்று திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “யார் வேண்டுமானாலும் கொள்கைத் தலைவர் என பெரியார் பேரை வைத்துக்கொள்ளலாம், பெரியார் போட்டோ போட்டுக்கொள்ளலாம்.
தேர்வில் நாம் படிக்கும்போது சில கடினமான கேள்விகளை தவிர்த்துவிடுவோம். அதுபோல, நமது டம்மி முதலமைச்சர், பெரியாருடைய கொள்கை வாரிசு என்று சொல்லிக்கொண்டு புகைப்படங்களைப் போட்டுக் கொள்வார்.
ஆனால் பெரியாரின் சில கொள்கைகளை சாய்ஸில் விட்டுவிட்டு, ஆப்ஷனில் வைத்துக்கொண்டு சில கொள்கைகளை மட்டும் நான் பின்பற்றுகிறேன் எனப் பேசுவார்.
இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். செஞ்சியில் ஒரு சிறுமியை 40 நாள்களாக தேடிக்கொண்டிருக்கிறோம்.
பெற்றோர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஊரே சோகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அந்தச் சிறுமிக்கு என்னவானது என பதட்டத்தில் உள்ளனர்.
காவல்துறையின் வேலை அந்த சிறுமியை கண்டுபிடிப்பது. இதை அனைவரும் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் அந்த காவல்துறைக்கு பொறுப்பேற்கக்கூடிய முதலமைச்சர் இதுவரை வாயைத் திறந்து இதைப் பற்றிப் பேசியிருப்பாரா என்று பார்த்தீர்கள் என்றால், ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
குழந்தையை கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறை, கடைசியாக போலீஸ் ஸ்டேஷனில் யாகம் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் பெரியாரிஸ்ட்.
இதற்கு முன் எந்த ஆட்சியிலும் இப்படி ஒரு கொடுமை நடந்தது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் வெறும் ஜோசியம், ஜாதகம், யாகம் என்றுதான் இன்று ஆட்சியே நடக்கிறது.
முதலமைச்சர் எந்த ஊருக்கு போனாலும், எந்த மாநிலத்துக்கு போனாலும், அங்க முதலில் அவர் போவது அங்குள்ள கோயிலுக்குதான். அதன் பிறகே மற்ற வேலைகள் நடக்கும்.
நாமெல்லாம் போலிச் சாமியாரைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு போலி பெரியாரிஸ்ட்டை இப்போது தான் பார்க்கிறோம். ஒரு போலி முதல்மைச்சரை இப்போது தான் பார்க்கிறோம்" என தெரிவித்தார்.
செஞ்சி ஆலம்பூண்டியைச் சேர்ந்த ஹேமலதா என்ற ஏழு வயது சிறுமி காணாமல் போய் 43 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில் இதுவரை போலீசாருக்கு எந்தவித தகவலும் கிடைக்காதது குறிப்பிடத்தக்கது.