சென்னைக்கு விமானம் மூலம் வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு, நகரத்திற்குள் நுழையும் போதே மறக்க முடியாத மற்றும் வரவேற்கும் விதமான அழகிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி புதிய பொலிவூட்டும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
கத்திப்பாரா மேம்பாலம் முதல் சென்னை சர்வதேச விமான நிலையம் வரையிலான 4.8 கி.மீ தூரப் பகுதியை ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் ‘கேட்-வே ஆப் சென்னை’ என்ற பெயரில் நவீன முறையில் அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான பணிகளை விரைவாகவும் திறம்படவும் முடிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி இதை இரண்டு முக்கியப் தொகுப்புகளாகப் பிரித்து உள்ளது.
முதலாவதாக, விமான நிலையத்திலிருந்து கத்திப்பாரா வரையிலான சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதைகள், பசுமைப் பகுதிகள் மற்றும் மின் விளக்கு அமைப்புகளை மேம்படுத்துவதற்காகத் தனியாக ரூ.5.65 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
2-வதாக விமான நிலையத்தின் வி.ஐ.பி. கேட் அருகே உள்ள சுமார் 1 ஏக்கர் பரப்புடைய ‘வி.ஐ.பி. பூங்கா’ மற்றும் அதன் அருகில் உள்ள மாநகராட்சிப் பூங்கா ஆகியவற்றை அதி நவீன வசதிகளுடன் புதுப்பிப்பதற்காக ரூ. 4.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்லும் வழியில் தனித்துவமான வரவேற்புப் பகுதிகள் இருப்பது போல, சென்னைக்குள் நுழையும் ஒவ்வொரு நபரும் எமது ஊரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் உணரும் வகையிலான சூழலை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இதற்காக தமிழ்நாடு மற்றும் சென்னையின் வரலாற்றுச் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் தீம் கலைப் படைப்புகள் மற்றும் சின்னங்கள் இங்கு நிறுவப்படவுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் பழுதடைந்த சிமெண்ட் நடைபாதைகள், பயன்பாடற்ற தடுப்புகள், காடாக மண்டிக்கிடக்கும் தேவையற்ற செடிகள் மற்றும் உடைந்த கட்டிடப் பகுதிகள் முற்றிலும் அகற்றப்படும்.
அதற்குப் பதிலாக அகலமான நடைபாதைகள், பூச்செடிகள், அலங்கார மரங்கள், புல்வெளிகள் மற்றும் தானியங்கி நீர்ப்பாசன வசதிகள் அமைக்கப்பட்டு அப்பகுதி பசுமையாக்கப்படும். மேலும், இரவு நேரங்களில் அழகூட்டும் அலங்கார மின்விளக்குகள், பயணிகள் அமரப் பெஞ்சுகள், தகவல் பலகைகள் மற்றும் சிற்பங்கள் நிறுவப்படும். நங்கநல்லூர் சிக்னல் அருகில் உள்ள பழமையான காவல் சாவடி மற்றும் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அப்பகுதியில் கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, பழுதடைந்த கழிப்பறைகளும் புனரமைக்கப்படும்.
இப்பணிகளைத் தொடங்குவதற்கு முன், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் மின்கம்பிகள் அல்லது குழாய்களை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு, விரைவில் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.