சென்னை மாநகரில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் பூங்காக்கள்- கார் பார்க்கிங் வசதி: மாநகராட்சி திட்டம்

சிவானந்தா சாலையில் உள்ள பறக்கும் ரெயில் பாலத்தின் கீழே விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
Published on

ஒவ்வொரு இடத்திற்கும் வெவ்வேறு தேவைகள் இருப்பதால் அதற்கேற்ப வடிவமைப்புகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும் இந்த பணிகள் விரைவில் செய்து முடிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மேம்பாலங்கள் போக்குவரத்தை எளிதாக்கினாலும் மேம்பாலத்தின் கீழ் பகுதி சரிவர பராமரிக்கப்படாமல் குப்பை கிடங்குகளாக காட்சி அளிக்கின்றன.

இவற்றை சுத்தமாக வைத்திருக்கவும், பூங்காக்கள் அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

வாகன நிறுத்துமிடம்

தியாகராய நகரில் ஜி.என்.ஷெட்டி சாலையில் உள்ள கலைவாணர் மேம்பாலம் மற்றும் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் தலா 10 கார்கள் மற்றும் 40 இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் கலைவாணர் மேம்பாலத்தின் கீழே, நடைபாதையுடன் சிறுவர் விளையாட்டு பகுதி உருவாக்கப்பட உள்ளது. வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 20 மின்சார வாகன சார்ஜிங் மையங்களும், பொதுக் கழிப்பறைகளும் கட்டப்பட உள்ளன.

ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகன நிறுத்துமிடங்கள், புரசைவாக்கம் டவுட்டன் மேம்பாலத்தில் வாகன நிறுத்துமிடங்கள் அமைய உள்ளது. இந்த வாகன நிறுத்துமிடம் இலவசமாக இருக்கும்.

மாநகராட்சி திட்டம்

சிவானந்தா சாலையில் உள்ள பறக்கும் ரெயில் பாலத்தின் கீழே விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மியூசிக் அகாடமி மேம்பாலம், பீட்டர்ஸ் சாலை, ரங்கராஜபுரம் மேம்பாலம், ஜி.கே.மூப்பனார் சாலை, பாந்தியன் ரோடு மேம்பால பகுதியில் அலங்கார விளக்கு வசதியுடன் இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளது.

இது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு இடத்திற்கும் வெவ்வேறு தேவைகள் இருப்பதால் அதற்கேற்ப வடிவமைப்புகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும் இந்த பணிகள் விரைவில் செய்து முடிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com