தமிழக செய்திகள்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் முதலிடம்: உலக அளவில் 6-வது இடத்தை பிடித்து பெருமை!

பெங்களூருவில் உள்ள கெம்பெகவுடா பன்னாட்டு விமான நிலையம் 87 சதவீத நேரத் துல்லியத்துடன் உலக அளவில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பெரிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. உலகளாவிய அளவில் இது ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையில் சென்னை பன்னாட்டு விமான நிலையம் மீண்டும் தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து தரவு பகுப்பாய்வு நிறுவனமான 'சிரியம்' (Cirium) வெளியிட்டுள்ள அக்டோபர் மாதத்திற்கான விமான இயக்க நேரத் துல்லியப் பட்டியலின்படி, இந்தியாவில் உள்ள பெரிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. உலகளாவிய அளவில் இது ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது.

நேரந் தவறாமை

கடந்த அக்டோபர் மாதத்தில் சென்னை விமான நிலையம் 87.33 சதவீத நேரத் துல்லியத்துடன் தனது புறப்பாடுகளைச் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முன்னணி விமான நிலையங்களான பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் மொத்தம் 65 வழித்தடங்களில் 11,189 விமானங்கள் கண்காணிக்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது விமானங்களின் இயக்கம் அதிகரித்திருந்தாலும், நேரத் துல்லிய விகிதம் சற்று குறைந்து நான்காவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு மாறியுள்ளது.

பிற விமான நிலையங்களின் நிலை

இந்தப் பட்டியலில் பெங்களூருவில் உள்ள கெம்பெகவுடா பன்னாட்டு விமான நிலையம் 87 சதவீத நேரத் துல்லியத்துடன் உலக அளவில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கொல்கத்தா விமான நிலையம் 16-வது இடத்தையும், ஐதராபாத் விமான நிலையம் 19-வது இடத்தையும் பெற்றுள்ளன. உலக அளவில் சீனாவின் ஹார்பின் தைபிங் பன்னாட்டு விமான நிலையம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

உள்கட்டமைப்பு மேம்பாடுகள்

விமான நிலையத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த விமான நிலைய இயக்குநர் எம்.ராஜா கிஷோர் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையத்தின் வான்வழிப் பகுதி, முனையம் மற்றும் நகர்ப்புறப் பகுதி செயல்பாடுகளில் கொண்டுவரப்பட்ட தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் காரணமாகவே இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது. மேலும், விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள ஒருங்கிணைந்த முனையம் (Terminal 3) மற்றும் நவீன வசதிகள் மூலம் சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT