தமிழக செய்திகள்

பயணிகளின் கவனத்திற்கு... எழும்பூர்-புதுச்சேரி இடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு தினந்தோறும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இந்த நிலையில், எழும்பூர்- புதுச்சேரி இடையிலான இந்த பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

ரெயில் சேவை மாற்றம் தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மறுசீரமைப்பு பணி

எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் நாளை முதல் வருகிற 24-ந்தேதி வரை எழும்பூருக்கு பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும். மேலும், சென்னைக் கடற்கரை – தாம்பரம் இடையேயான புறநகர் ரெயில் பாதையில் உள்ள அனைத்து நிலையங்களிலும் இந்த ரெயில் நின்று செல்லும்.

அதே போல இன்று முதல் வருகிற 24-ந்தேதி வரை புதுச்சேரியில் இருந்து மதியம் 3.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பயணிகள் ரெயில் எழும்பூருக்கு பதிலாக சென்னை கடற்கரைக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்

மேலும், எழும்பூர் ரெயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த முக்கிய ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களது பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.