தமிழக செய்திகள்

துணைவேந்தர் நியமன சட்ட வழக்கு: இறுதி விசாரணை ஜூலை 29-க்கு தள்ளிவைப்பு

துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கும் சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கி தி.மு.க. ஆட்சியின்போது சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த சட்டத்துக்கு இடைக்காலத்தடை விதித்தது.

இந்த தடையை எதிர்த்து அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடையை நீக்கியதுடன், பிரதான வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பதில் மனுக்களை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு இறுதி விசாரணைக்காக வருகிற ஜூலை 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.