தமிழக செய்திகள்

ரூ.4 கோடி பணம் பறிமுதல் வழக்கு - நயினார் நாகேந்திரன் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்!

வழக்கு ஜூலை 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நெல்லை விரைவு ரயிலில் சுமார் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், அவரது தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து இந்த விவாகரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், அந்த கட்சியை சேர்ந்த எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது சிபிசிஐடி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை தரப்பில் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், சேகர் உட்பட 13 பேருக்கு எதிராக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது. இதனையடுத்து அவர்கள் குற்ற பத்திரிக்கை நகல் பெறுவதற்காக இன்று நேரில் ஆஜராக ஜார்ஜ் டவுன் மேஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுந்தர பாண்டியன் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உட்பட 11 பேர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட கோவர்தன், விக்னேஷ் என்ற கணேஷ் இருவரும் ஆஜராகவில்லை.

இதனை அடுத்து வழக்கின் விசாரணையை வருகிற 16-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி சுந்தர பாண்டியன், சம்பந்தப்பட்ட அனைவரும் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் எனவும், அப்போது அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என தெரிவித்தார்.