செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சிறுமியின் தாயாரை விசாரித்த சிபிசிஐடி டிஎஸ்பி கீதா, ஆய்வாளர் ரேவதி வீட்டை சுற்றி உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம் பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வருபவர் வடிவேலு. இவருடைய மனைவி பவானி. இந்த தம்பதியினரின் 2-வது மகள் ஹேமாவதி (வயது 7). இவள் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 11-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அன்று இரவு வீட்டில் பெற்றோருடன் படுத்து தூங்கியுள்ளாள். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது ஹேமாவதியை காணவில்லை. அவளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார், பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதுடன், சிறுமியை கண்டுபிடிக்க பல இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
சிறுமி மாயமாகி 11 நாட்கள் ஆகியும், அவளைப்பற்றி இதுவரையிலும் எந்தவித துப்பும் கிடைக்காததையடுத்து இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக போலீஸ் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர். சிறுமியின் தாயாரை விசாரித்த சிபிசிஐடி டிஎஸ்பி கீதா, ஆய்வாளர் ரேவதி வீட்டை சுற்றி உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.