இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட மாட்டார் என்று அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு, தான் வென்ற மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு விராலி மலையில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, ‘முதலமைச்சர் விஜய் நம்ம தலைவரை பார்த்து கேட்கிறார். எங்க உங்க அப்பாவ காணோம்’ என்கிறார்.
அவர் வருவார், சட்டமன்றத்துக்கு சீக்கிரமே வந்துடுவார். அதுதான் எங்களால் சொல்ல முடியும். இது உறுதி என்று கூறி இருந்தார். கே.என்.நேருவின் பேச்சு கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஆனால் சென்னை தேனாம்பேட்டையில் நிருபர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை நான் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதுபற்றி அறிவாலய வட்டார மூத்த தலைவர்கள் கூறும்போது, ‘சட்டசபையில் முதலமைச்சர் விஜய்க்கு சரிசமமாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். இந்த இடத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் அமர்வது நன்றாக இருக்காது. அரசியல் அனுபவம், வயது வித்தியாசம் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்.
தலைவர் ஜெயித்து சட்டசபைக்கு சென்றால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை உதயநிதி ஸ்டாலின் இழக்க நேரிடும். இதை தலைவர் விரும்பமாட்டார்.
விஜய்க்கு அவர் வயதில் உள்ள உதயநிதி ஸ்டாலினே போதும் என்ற மனநிலையில் மு.க.ஸ்டாலின் உள்ளார். எனவே மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தலில் நிற்க மாட்டார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.