தமிழக செய்திகள்

வாணியம்பாடி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய பிளஸ் 2 மாணவியின் உடல் எரிப்பு - தந்தை மீது வழக்குப்பதிவு

மாணவி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சிக்குட்பட்ட ஏரி கொல்லை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, கூலி தொழிலாளி. இவரது மகள் மோவிதா (வயது16). இவர் அருகே உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மோவிதா மாலை வழக்கம்போல் வீடு திரும்பினார். திடீரென மோவிதா காணாமல் போனார். பெற்றோர் தேடி பார்த்தபோது வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் மோவிதா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் இரவோடு இரவாக அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மோவிதாவின் உடலை எரித்ததாக தெரிகிறது.

இது குறித்து தகவலறிந்த வி.ஏ.ஓ. காசிநாதன் நேற்று அம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மாணவி படித்த பள்ளி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் மாணவி தந்தை கோவிந்தசாமி மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.