சில இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதை பார்த்ததும் பைக் ரேசில் ஈடுபடும் வாலிபர்கள் வாகனங்களை எதிர்திசையில் திருப்பி அதிவேகமாக தப்பிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே பிரதான சாலைகளில் நள்ளிரவு நேரங்களில் வாலிபர்கள் கூட்டமாக பைக் ரேசில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்கள் நடைபெறுவதாகவும், இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று நள்ளிரவு சென்னை நகரின் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், ஜெமினி, கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட சாலைகளில் 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் இருசக்கர வாகனங்களில் திரண்டு பைக் ரேசில் ஈடுபட்டனர். அதிவேகமாக வாகனங்களை இயக்கியதுடன், காதை கிழிக்கும் வகையில் அதிக சத்தம் எழுப்பியபடி பைக் சாகசங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் நள்ளிரவு நேரத்தில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, சாலையோரம் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களும் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக வள்ளுவர் கோட்டம் சிக்னல் அருகே மட்டும் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றாக திரண்டு பைக் சாகசங்களில் ஈடுபட்டனர். சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து இருக்கும் நிலையில், எந்தவித அச்சமும் இன்றி அதிவேகமாக பைக்குகளை இயக்கி சாகசத்தில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதனிடையே, கோடம்பாக்கம் பிரதான சாலையில் பைக் ரேஸ் நடைபெற்றதால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டனர். நீண்ட நேரமாக அதிக சத்தத்துடன் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டதால் தூக்கத்தை இழந்ததாக கூறிய பொதுமக்கள், சாலையின் நடுவே தடுப்புகளை அமைத்து பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதனால் கோடம்பாக்கம் பிரதான சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஒருபுறம் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் தப்பிச் செல்ல முயன்ற நிலையில், மறுபுறம் அவர்களை துரத்திச் சென்ற பொதுமக்களால் அந்த பகுதியே சில மணி நேரம் பதற்றமான சூழலை சந்தித்தது. பைக் ரேசுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
நீண்ட நேரத்திற்கு பிறகு அங்கு வந்த ரோந்து போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இதுபோன்ற பைக் ரேஸ் தொடர்ந்து நடைபெறுவதாகவும், பல முறை போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
அதே நேரத்தில், சில இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதை பார்த்ததும் பைக் ரேசில் ஈடுபடும் வாலிபர்கள் வாகனங்களை எதிர்திசையில் திருப்பி அதிவேகமாக தப்பிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு எதிர்திசையில் அதிவேகமாக வரும் இருசக்கர வாகனங்களால் எதிரே வரும் பொதுமக்கள் மற்றும் சக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்களை பிடிப்பது மட்டுமின்றி, அவர்கள் தப்பிச் செல்லும் போது மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் போலீசார் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் சாலைகளில் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியதுடன், பைக் ரேசில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.