'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் பேசிய அண்ணாமலை, மேகதாது அணை விவகாரம், மத்திய அரசுடனான தொடர்பு, தற்போதைய ஆட்சிமுறை மற்றும் தனது அரசியல் நகர்வுகள் குறித்து வெளிப்படையாக கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசிய அண்ணாமலை, இதில் பிரதமர் நரேந்திர மோடி நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்பட்டுள்ளார் என்றும், அவர் மீதான தனது நம்பிக்கை இன்றளவும் தொடர்வதாகவும் தெரிவித்தார். கர்நாடகாவில் 15 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வரும் சூழலில், எல்லைக்குச் சென்று பச்சைத் துண்டு அணிந்து போராட்டம் நடத்துவது, பேருந்துகளை சேதப்படுத்துவது போன்ற விளம்பர அரசியலைத் தாம் ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய போலித்தனமான அரசியலால் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று விமர்சித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக, நடப்பு மாதத்திற்குள் 20 லட்சம் மரக்கன்றுகளை நடுவதுதான் தங்கள் அமைப்பின் முதன்மை இலக்கு எனத் தெரிவித்த அண்ணாமலை, தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள அமைச்சர்கள் மீது முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தலைவர்கள் இனி டெல்லியிலோ, புனித ஜார்ஜ் கோட்டையிலோ, போயஸ் தோட்டத்திலோ, கோபாலபுரத்திலோ அல்லது பனையூரிலோ உட்கார்ந்து முடிவுகளை எடுக்கும் காலம் முடிந்துவிட்டது என்று அவர் அழுத்தமாகக் கூறினார்.
மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தம்மை டெல்லிக்கு அழைத்து பொறுப்பேற்கச் சொன்னது உண்மைதான் எனக் குறிப்பிட்ட அவர், தம்மீது அல்லது பா.ஜ.க மீது சந்தேகம் இருப்பவர்கள் நேரடியாக அமித்ஷாவிடமே சென்று கேட்டுத் தெளிவுபெறலாம் என்று சவால் விடுத்தார்.
தான் பா.ஜ.கவின் ‘பி’ டீமாகச் செயல்படுகிறேனா அல்லது கட்சியின் வரம்புகளை மீறி இயங்குகிறேனா என்ற பல்வேறு விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மாற்றத்திற்கு ஒரு வருட கால அவகாசம் அளித்துச் செயல்பட விட வேண்டும் என்றார். இந்த அரசு தவறு செய்தால் தட்டிக் கேட்போம், நல்ல விஷயங்களைச் செய்தால் பாராட்டுவோம், சரியாக ஆட்சி செய்யத் தவறினால் அரசை வீழ்த்துவோம் என்று கூறினார்.