தமிழக செய்திகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல.. காமெடியன் - அன்புமணி

எந்த வகையில் பார்த்தாலும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு பயனளிக்கக் கூடியதோ, வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடியதோ அல்ல.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2026-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்காக தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான எந்தத் திட்டமும் இல்லை; மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் சதுரங்க வேட்டை வாக்குறுதிகள் தான் இடம் பெற்றுள்ளன.

மொத்தத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை என்பது இந்தத் தேர்தலின் கதாநாயகனும் அல்ல... கதாநாயகியும் அல்ல. மாறாக வில்லனாகவும், காமெடியனாகவும் தான் உள்ளது.

2021-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை அளித்த தி.மு.க., அவற்றில் வெறும் 66-ஐ மட்டும் தான் நிறைவேற்றியது, 439 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தேன்.

இப்போது தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 517 வாக்குறுதிகளில் 63 வாக்குறுதிகள் முந்தைய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தவை தான். அவற்றுக்கு வேறு நாமகரணங்களைச் சூட்டி புதிய வாக்குறுதிகளாகக் காட்டி மோசடி செய்ய தி.மு.க. முயன்றிருக்கிறது. இது தோல்வியின் அடையாளம்.

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கானது என்று வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றித் தான் கடந்த முறை தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால், நீட் தேர்வை ரத்தும் செய்யாமல், தமிழ்நாட்டிற்கு விலக்கும் பெறாததால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

ஆனால், கொஞ்சம் கூட தோல்வி உணர்வும், குற்ற உணர்வும் இல்லாமல், நீட் என்ற பெயரை மட்டும் தவிர்த்து விட்டு, மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது.

எந்த வகையில் பார்த்தாலும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு பயனளிக்கக் கூடியதோ, வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடியதோ அல்ல. ஏற்கனவே 505 வாக்குறுதிகளை அளித்து அவற்றில் 87 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் செய்த தி.மு.க.வின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.