சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை அடுத்த வேடநத்தத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் நடந்து 9 நாட்களுக்குப் பிறகு குற்றவாளியை கைது செய்த போலீசார் மேற்கொண்ட முயற்சிகள் கடுமையானவை, அதிக அர்ப்பணிப்புத் தன்மை கொண்டவை என்றாலும் கூட காவல்துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் பாராட்டத்தக்கவையாக இல்லை.
தர்ம முனீஸ்வரன் போன்ற கொடிய குற்றவாளிகள் ஜாமினில் விடுவிக்கப்படும் போது, அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது போலீசார் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஆகும். ஆனால், தூத்துக்குடி காவல்துறை இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டது.
தமிழ்நாட்டை உலுக்கிய கொடிய நிகழ்வுகளையும், அந்த வழக்குகளில் காவல்துறை காட்டிய அலட்சியத்தையும் வைத்துப் பார்க்கும் போது ஒரு விஷயம் தெளிவாகிறது. மன்னிக்கவே முடியாத குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். அவர்களை கண்காணிக்கவோ, அவர்கள் மீண்டும், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவோ காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, சுதந்திரமாக நடமாட வேண்டிய பெண்களும், குழந்தைகளும் தான் சுதந்திர நாட்டில் தங்களுக்கு என்ன ஆகுமோ? என்ற அச்சத்தில் வாழ வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.