

விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 10-ம் தேதி வீட்டில் இருந்து இரவு வேளையில் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற போது காணாமல் போன நிலையில், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஒரு நாள் முழுவதும் தேடினர். இந்நிலையில் மறுநாள் அதே காட்டுப் பகுதியில் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, குற்றவாளிகளை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன் உத்தரவின் பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்து மாணவியின் உறவினர்கள், கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதி அருகே வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றதுடன் கிராமம் முழுவதும் வீடு வீடாக சல்லடை போட்டு விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையின் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் சம்பவம் நடந்த அன்று அந்தப் பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் சந்தேகத்திற்கிடமாக சென்றதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
அந்த இருசக்கர வாகனத்தின் நம்பரை ஆய்வு செய்ததில் அந்த இருசக்கர வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து மர்மநபரால் திருடி கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அந்த இருசக்கர வாகனம் திருட்டு போயிருப்பதாக போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டு இருந்தது.
தொடர்ந்து நடந்த விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடி வந்த சாயல்குடியை சேர்ந்த மாவீரன் என்ற தர்மமுனீஸ்வரன் (வயது 27) என்ற வாலிபர் சிக்கினார். அவரது உடலில் பல இடங்களில் நகக்கீறல்கள் இருந்தது.
இதுதொடர்பாக அவரிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து மாணவியின் தசை துனுக்குகளுடன் வாலிபரின் உடல் பாகங்களில் இருந்து மாதிரிகள் எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ததில் அவர் கொலையாளி என்பது உறுதியானது.
தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவருக்கு வேறு யாரேனும் உதவி செய்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது. தர்மமுனீஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு கோவில்பட்டி அருகே கீழ ஈரால் என்ற இடத்தில் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தர்மமுனீஸ்வரனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பெண்களை குறிவைத்து குற்றம் நிகழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூதாட்டி கொலை செய்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த தர்மமுனீஸ்வரன் மாணவி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற போது பின் தொடர்ந்து சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்துள்ளான். குற்றவாளியை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.