அன்புமணி ராமதாஸ் 
தமிழக செய்திகள்

வறுமையில் வாடும் பணியாளர்களை மேலும், மேலும் வதைப்பதா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் கடந்த 3 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கி அனைத்து வகையான சமூகப் பாதுகாப்புகளையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காலி பணியிடங்கள்

தமிழ்நாட்டில் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒரே இடத்தில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சகி எனப்படும் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (SAKHI – One Stop Centre) பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது. மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு அவர்களின் உழைப்புக்கான வெகுமதியை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

வன்முறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு முழுவதும் 59 இடங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒவ்வொரு மையத்திலும் நிர்வாகி, தகவல் தொழில்நுட்ப நிர்வாகி, மூத்த ஆலோசகர், களப்பணியாளர்கள், பாதுகாப்புக்காவலர்கள், பன்முக உதவியாளர்கள் என 13 பேர் வீதம் மாநிலம் முழுவதும் மொத்தம் 767 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பல பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவர்களின் பணிகளையும் மற்றவர்களே செய்ய வேண்டியுள்ளது.

நெருக்கடி

பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உதவி, சட்ட ஆலோசனைகள், உளவியல் வழிகாட்டுதல், தற்காலிகப் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு போன்ற அனைத்து ஒருங்கிணைந்த சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் அமைப்பாக இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இது எந்த வகையிலும் போதுமானதல்ல எனும் நிலையில் இந்த ஊதியம் கூட 3 மாதங்களாக வழங்கப்படாததால் அதன் ஊழியர்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர்.

ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் வறுமையில் வாடும் நிலையில், மையத்தை இயக்குவதற்கு தேவையான அடிப்படை செலவுகளை செய்வதற்கு கூட நிதி ஒதுக்கப்படாததால், அவற்றையும் பணியாளர்களே கடன் வாங்கி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது குறித்து மாவட்ட அளவிலான உயரதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் எந்த பயனும் இல்லை.

தமிழக அரசு நடவடிக்கை

ஒருங்கிணைந்த சேவை மையங்களை நடத்துவதற்கான நிதியை மத்திய அரசே வழங்குகிறது. அதைக் கொண்டு அண்மையில் தாக்கல் செயப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இந்த மையங்களுக்கு ரூ.18.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததன் காரணம் என்னவென்று தெரியவில்லை.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு இந்த ஊதியம் மட்டும் தான் வாழ்வாதாரம் ஆகும். எனவே, ஒருங்கிணைந்த சேவை மையங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் கடந்த 3 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கி அனைத்து வகையான சமூகப் பாதுகாப்புகளையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT