பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று வெளியிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
2026 மற்றும் 27ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை மொத்தம் ரூ.93,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.68,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத் திட்டங்களுக்காக நீர்வளத்துறை மூலம் ரூ.25,000 கோடி செலவிடப்படும்.
2025 மற்றும் 26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் (தி.மு.க) நிதிநிலை அறிக்கையில் வேளாண்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.15,230.30 கோடியுடன் ஒப்பிடும் போது, இது 446 சதவீதம் அதிகம்.
வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.13,000 கோடி உழவர்கள் இடுபொருள் மானியத்திற்கு செலவிடப்படும்.
வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.25,000 கோடி செலவிடப்படும்.
பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.
பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.
தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் 25 சதவீதம் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதன்படி, நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பான ரூ.6 லட்சம் கோடியில் ரூ.1.5 லட்சம் கோடி வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை, நீர்வளத்துறைக்கு மட்டும் ரூ.93,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வேளாண்மை சார்ந்த கால்நடைத்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றில் வேளாண்மை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும் ரூ.57,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலையில், பாசனத் தேவைகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ.5,000 சிறப்பு மானியம் வழங்கப்படும்.
நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாத பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படாததால் ஏற்படும் இழப்பைக் கருத்தில் கொண்டு, உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் இருந்து உழவர்கள் வாங்கிய பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இதற்கான தொகையை அரசே வெளிச் சந்தையில் இருந்து கடனாக வாங்கி, கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தும்.
பொதுத்துறை வங்கிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களில் ரூ.1 லட்சம் வரையிலான தொகையை அரசே ஏற்றுக் கொண்டு நேரடியாக செலுத்தும்.
கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெறும் குறுகியகால கடன்களுக்கு 10 சதவீதம் மானியம் வழங்கப்படும். ரூ.1 லட்சம் கடன் வாங்கினால், ரூ.90,000 திருப்பி செலுத்தினால் போதுமானது.
பாமக தேர்தல் அறிக்கையை நிறைவேற்றும் வகையில், வேளாண் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இது 3 தவணைகளில் வழங்கப்படும்.
உழவர்களின் வாரிசுகளுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இக்கட்டணத்தை அரசே செலுத்தும்.
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்.
வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்காக தனி வாரியம் ஏற்படுத்தப்படும்.
நெல் உள்ளிட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்ய 6,000 நிலையங்கள் அமைக்கப்படும்.
கொள்முதல் பணிகளை மேற்கொள்ள 38,866 பருவகாலப் பணியாளர்கள் பணிநிலைப்பு செய்யப்படுவார்கள். 12,000 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாகும் வகையில், வேளாண் விளைபொருள்கள் சட்டம் 2026 இயற்றப்படும்.
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதைத் தடுக்கும் வகையில், உழவர்கள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் அதே நாளில் கொள்முதல் செய்யப்படும்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாத்து வைப்பதற்காக, அரசு கிடங்குகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 302-லிருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 1000ஆக உயர்த்தப்படும்.
காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
நெல் கொள்முதல் அளவு ரூ.70 லட்சம் டன்னாக அதிகரிக்கப்படும்.
தமிழ்நாட்டில் துவரம்பருப்பு சாகுபடி செய்யப்படும் பரப்பு இப்போதுள்ள 1.25 இலட்சம் ஏக்கரில் இருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.
துவரம் பருப்பு சாகுபடி செய்யும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
எண்ணெய் வித்துப் பயிர்களான எள் சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 50 ஆயிரம் ஏக்கர் வீதமும், சூரியகாந்தி சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 25 ஆயிரம் வீதமும் அதிகரிக்கப்படும்.
நிலக்கடலை சாகுபடி பரப்பு 5.62 லட்சம் ஏக்கரில் இருந்து 7 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.
எண்ணெய் வித்துப் பயிர்களை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு உழவர்களிடம் இருந்து நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு, மானிய விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.
நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவையும் நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும்.
நீர்ப்பாசனம் திட்டம் மற்றும் கொள்முதல் செய்த உணவுப் பொருட்களை திமுக, அரசால் பாதுக்காக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் ஒருநாளைக்கு 2 விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.