தமிழக செய்திகள்

தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்படாத இடைத்தேர்தல்: அதிகரிக்கும் ராஜினாமாக்கள்? நிலவும் குழப்பம்!

தமிழ்நாட்டின் 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட பிறகு காலியான குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

ராஜினாமா, தகுதி நீக்கம், மரணத்தைத் தொடர்ந்து மாநிலத்தில் தலா ஒரு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினின் ராஜினாமாவைத் தொடர்ந்து பீகாரின் பாங்கிபூர் சட்டமன்ற தொகுதி காலியானது.

மத்தியப் பிரதேசத்தில், ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ததியா தொகுதி காலியானது. குஜராத்தில், யோகேஷ்பாய் நரந்தாஸ் படேலின் மரணத்தால் மஞ்சள்பூர் காலியானது.

இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஜூலை 30ம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 3ம் தேதியும் நடைபெற உள்ளது.

வேட்புமனுத் தாக்கல் ஜூலை 6 தொடங்கி, ஜூலை 13 முடியும் என்றும், வேட்புமனுக்களின் பரிசீலனை ஜூலை 14-ஆம் தேதி நடைபெறும் மற்றும் வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஜூலை 16 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது கவனம் ஈர்த்துள்ளது. இரண்டு விஜயபாஸ்கரும் கடந்த வாரம் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தநிலையில் இன்று தவெகவில் இணைந்தனர்.

இவர்களின் இரு தொகுதிகள் சேர்க்கப்படாவிடினும், மே மாத இறுதியிலேயே திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூன்.2ம் தேதிதான் குஜராத் மஞ்சள்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் யோகேஷ்பாய் நரந்தாஸ் படேல் உயிரிழந்தார்.

ஜூனில் இறந்தவரின் தொகுதிக்கே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும்போது, மே மாதம் காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்குக்கூட தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

தவெக தலைவர்கள் சிலர், இன்னும் அதிமுகவைச் சேர்ந்த பலர் இணையவுள்ளதாக கூறும்நிலையில், ராஜினாமாக்கள் இன்னும் அதிகரிக்குமா? இதனால் தமிழ்நாட்டிற்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லையா?

அல்லது மாநிலத்தில் நிலவும் அரசியல் நகர்வுகளை கருத்தில்கொண்டு தமிழ்நாடு தேர்தல் ஆணையமே, தலைமை தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் குறித்து அறிவிக்கவில்லையா என குழப்பம் நிலவிவருகிறது.