திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவுகளை பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
இதில் இதுவரை 13 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அனைவரும் ஒடிசா மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 146 வடமாநில தொழிலாளர்களை மீட்டு பெரியபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒடிசா மாநிலத்தைச்சேர்ந்த 32 பெண்கள், 27 ஆண்கள் என மொத்தம் 59 தொழிலாளர்களை இன்று ரெயில் மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக தொழிலாளர்கள் அனைவரும் 2 பஸ்கள் மூலம் சென்னை, சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களை திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய் துறையினர் ஒடிசா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அனைவரும் இன்று காலை 10 மணிக்கு புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் புறப்பட்டு சென்றனர். மற்ற தொழிலாளர்களையும் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.