தமிழக செய்திகள்

தீவிர புயலாகும் 'அக்வான்': இன்று தமிழகத்தில் எங்கெங்கு மழை?

தீவிர புயலாக உருவெடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அக்வான் புயல் தீவிர புயலாக உருவெடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது.

இது தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றது.

சென்னையில் இருந்து 760 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கே மையம் கொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை புயலாக வலுப்பெற்றது.

'அக்வான்' என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீவிர புயலாக உருவெடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்வான் புயல் வருகிற 20 ஆம் தேதி நண்பகலில் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திர கடற்கரையில் மிக தீவிர புயலாக கடக்க வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

கடலோர பகுதிகளில்20-ந்தேதி வரை காற்று வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை

இதனிடையே தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாகவும் வருகிற 22ந்தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேநேரம் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

SCROLL FOR NEXT