

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து ‘அக்வான்’ புயல் உருவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ‘அக்வான்’ (Akvan) புயலாக வலுவடைந்துள்ளது.
இன்று (16 நவம்பர் 2026) மாலை 5:30 மணி நிலவரப்படி, இது தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக் கடலில், 12.2° வடக்கு அட்சரேகை மற்றும் 85.7° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.
இது சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கே சுமார் 610 கி.மீ தொலைவிலும், திருகோணமலைக்கு (இலங்கை) வடகிழக்கே 630 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 660 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 670 கி.மீ தொலைவிலும், கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கே 790 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மாலை வாக்கில் மேற்கு-மத்திய வங்கக் கடலில் ‘தீவிர புயலாக’ வலுவடையக்கூடும்.
அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, 19 நவம்பர் காலை வாக்கில் ‘மிகத் தீவிர புயலாக’ மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், நவ.20 நண்பகல் வாக்கில், நெல்லூர் மற்றும் துனி பகுதிகளுக்கு இடையே ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரையை கடக்கக்கூடும்.
அப்போது இது ‘மிகத் தீவிர புயலாக’ இருக்கும் என்றும், மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்தில் (அவ்வப்போது 145 கி.மீ வேகத்தில்) காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.