தமிழக செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: சட்டமன்ற தீர்மானத்திற்கு எதிரான அதிமுக மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

அதிமுக கொறடா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தீர்மானம்

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 19-ம் தேதி தமிழகத்தின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பதும் சேர்க்கப்பட்டது.

தனி தீர்ப்பாயத்திற்கு எதிராக அதிமுக மனு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக பிரச்சனையைத் தீர்க்க, மத்திய அரசு ஒரு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜூன் 19 சட்டமன்றத்தில் தீர்மானமானது கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டமன்ற தீர்மான திருத்தத்தை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

மனு மீதான விசாரணை

இந்த வழக்கானது தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அதிமுக தரப்பு வாதம்

சிறப்பு தீர்மானம் தொடர்பாக ஜூன் 18 ஆம் தேதி எம்எல்ஏக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மான நகலில் இடம்பெறாத திருத்தத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திருத்தம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் ஜூன்19ஆம் தேதி சட்டப்பேரவையில் நடந்த காட்சிகளையும் காட்டி வாதத்தை முன்வைத்தனர்

அரசு தரப்பு விளக்கம்

சட்டப்பேரவை நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது. மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து அதன் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் முடிவாக கருதி வழக்குத் தொடர முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு

இந்த நிலையில் இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர், நீதிபதிகள் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT