அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 பேருக்கு தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மற்றும் கட்சித் தாவல் விவகாரத்தில், சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 பேருக்கு தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின்னர் தவெகவில் இணைந்தவர்கள் எனக் கூறப்படும் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா, பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேருக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தவெகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மே 13-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் மனு அளித்தார். இதில் 21 எம்.எல்.ஏக்களை மன்னித்து நடவடிக்கையை கைவிடுவதாக எடப்பாடி பழனிசாமி பின்னர் கடிதம் கொடுத்த நிலையில், ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த 4 பேர் மீதான நடவடிக்கை மட்டும் தொடர்ந்தது. பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் ராஜினாமா செய்ததால், மொத்தம் 6 பேர் மீதான தகுதி நீக்க வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் முடிவை எதிர்த்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு, சபாநாயகர் ராஜினாமாவை ஏற்றது செல்லும் என்றும், ராஜினாமாக்கள் உண்மையானவை மற்றும் தன்னார்வமானவை என்றும் தீர்ப்பளித்தது. மேலும், தகுதி நீக்கம் தொடர்பான மனுக்கள் மீது இரண்டு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் சபாநாயகருக்கு உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார். இதன்படி, வரும் 10, 11, 12 ஆம் தேதிகளில் 4 பேரிடமும் நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போது இபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதாட உள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் 17-ம் தேதி இறுதி விசாரணை நடைபெற்று, அதன் பின்னர் சபாநாயகர் தனது முடிவை அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் ஏற்கனவே தவெக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம் என்பதால் இந்த வழக்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.