தமிழக செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் தகுதி நீக்க நடவடிக்கை - மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நம்பிக்கை கோரும் தீர்மானம்

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 13 அன்று தமிழக வெற்றி கழகம் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தபோது அதற்கு ஆதவராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.

தவெக-விற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும்படி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து அதிமுக-வில் இருந்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

இதற்கிடையே மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கோரி கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி, சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்.

இந்த மனுவை ஏற்று, அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செல்வகுமார் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தர்மதிகாரி மற்றும் அருள் முருகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமர்வு, கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க நடவடிக்கையை திரும்ப பெறுவதாக அதிமுக பொதுச் செயலாளர் மனு அளித்திருப்பதால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை தொடர வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்று கூறினர்.

மேலும், சட்டப்படி 15 நாட்களுக்குள் எம்.எல்.ஏ.க்களை மன்னித்து கடிதம் அளித்து விட்டால், தகுதி நீக்கம் என்ற கேள்வியே எழாது என்றும் நீதிபதிகள் கூறினர்.

இதைத் தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனுவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.