எடப்பாடி பழனிசாமி 
தமிழக செய்திகள்

ஜூலை 27-ல் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மதுரவாயல் தொகுதி நெற்குன்றம் பல்லவன் நகரில் விடியா திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாடம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டாஸ்மாக் மதுபானக் கடை

சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு விடியா திமுக அரசால் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி நெற்குன்றம் பல்லவன் நகரில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள், வேலைக்குச் செல்வோர் என மக்கள் அதிகம் புழங்கும் இந்த இடத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றக் கோரி விடியா திமுக ஆட்சியில், கழகத்தின் சார்பில் பொதுமக்களுடன் இணைந்து முறையிட்டதைத் தொடர்ந்து, இக்கடை விரைவில் மூடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டும் தற்போதுவரை மூடப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதிவாழ் மக்களும், நாள்தோறும் இந்தச் சாலையை பயன்படுத்தும் பொதுமக்களும் பல்வேறு வகையில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இடையூறு

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இடங்களில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றிவிட்டதாகக் கூறும் த.வெ.க. அரசு, நெற்குன்றம் பல்லவன் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாதது வேதனைக்குரிய விஷயமாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், மதுரவாயல் தொகுதி, நெற்குன்றம் பல்லவன் நகரில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் விடியா திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் சார்பில், 27.7.2026 - திங்கட் கிழமை காலை 10 மணியளவில், மதுரவாயல் பகுதி, நெற்குன்றம் N.T. பட்டேல் சாலை அம்மா உணவகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மக்கள் நலன்

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான S. கோகுல இந்திரா அவர்கள் தலைமையிலும், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் K.S. ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த, கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.